மத்திய கிழக்கில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஈரான் மற்றும் ஓமான் ஆகிய நாடுகள் ஹார்முஸ் நீரிணையை கண்காணிப்பதற்கான புதிய திட்டத்தை இன்று அறிவித்துள்ளன. உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான இந்த நீரிணையில் கண்காணிப்பை அதிகரிக்க இரு நாடுகளும் இணைந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், 'போருக்கு முந்தைய விதிகளை எதிர்பார்க்க முடியாது' என ஈரானிய அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஓமானுடன் இணைந்து செயல்படுவதாக தெரிவித்துள்ளனர். உலகளாவிய எண்ணெய் விலையில் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், இந்த முடிவு சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. ஹார்முஸ் நீரிணை வழியாக உலகின் 20 சதவீத எண்ணெய் போக்குவரத்து நடைபெறுவதால், இந்த நடவடிக்கை உலகப் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுர்கள் எச்சரித்துள்ளனர்.